ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம்.கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர்...ரோசப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல் காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால் கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும். இசையிலேயே காம உணர்வு கொடுக்குமுடியும் என்பதை இளையராஜா நிருபித்து இருக்கிறார்.. இந்தப் பாடல் “மதுவந்தி” என்ற ராகத்தில் புனையப்பட்டு உள்ளது
இதமான தபலா தாளத்துடன் பைக்கில் இருவருடன் பயணிக்கிறது. தாளம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது. இசை மொழி சகஜமாகி சிதார்-வயலின் - மாறி மாறி பின்னிப் பிணைந்து குழைந்து வர காட்சியில் பெயர் தெரியாத மணமில்லாத பூத்திருக்கும் காட்டுச்செடிகளிடையே ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடந்துவருவது கவிதை.
*"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது
ஆனால் அதுவும் ஆனந்தம்"*
என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும். மனதில் மறக்கமுடியாத பாடலை உள்வாங்கிக்கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்கள் வெகு வெகு வெகு சொற்பம். பாடலின் ஆன்மா காட்சியில் புகுத்தப்பட்டிருக்கிறது.
கள்ளத்தனம் புரிய மனம் திண்டாடுகிறது..அலைபாய்கிறது. தவறை துணிந்து செய்துவிடு என்று இவளின் உள் மனசு தூண்டுகிறது. பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் சிக்கென்று பற்றிக்கொள்வது போல, இவளின் காமத்தால் கொளுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு மிக அருகாமையில் அவளின் கள்ளக் காதலன் இருக்கிறான். கணவனோ, பரிதாபமாக எங்கோ இருக்கிறான். இதை இசையில் வார்த்தெடுத்தார் பாருங்கள் அவர்தான் இசைஞானி...."இங்க ஒரு அழகா இடம் இருக்கு ., உங்களுக்கு ஆட்சேபனையில்லனா" என்று காதலன் அழைக்க.. அந்த ஹீரோயின் படும் பாட்டை... 2.10 நிமிடங்கள் முதல் ஒலிக்கும் புல்லாங்குழலிசையை பாருங்கள். இதில் 35 வயது இளைஞனின் முதிர்ந்த இசைக்கோர்வையை பாருங்கள்.
சாதாரண கிராமத்து பெண்ணின் மோகத்தை சலனத்தை மோட்டர்பைக் பயணத்தில் இலக்கிய தரத்திற்கு கொண்டு போய் இருக்கிறார். திருமணமான கிராமத்துப் பெண் வேற ஒரு ஆணுடன் ”என் உள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது.... ஏன் வாட்டுது” என்று சலனித்தப்படி “ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று ஆனந்தத்தில் மிதந்தவாறே வெறிச்சோடிய கிராம இயற்கை சூழ்நிலையில் பைக்கில் பயணித்து பாடலின் முடிவில் அப்பாவித்தனமாக தன்னை இழக்கிறாள். இந்த இசையின் அடி நாதம் இதில் வரும் இரு கதாபாத்திரங்கள் பயணம் செய்தபடியே மெளனமாக பேசும் மொழி. இளையராஜா உணர்ச்சிகளை எடுத்து மொழிந்துள்ளார். பாடலும் காட்சிக்கு ஏற்றவாரு புனையப்பட்டுள்ளது. இசையுடன் இணைந்து மொழியை பேசுகிறது. காட்சியும் ஒன்றி போகிறது.
*என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன் ஏன் கேட்கிறது. வீணையும், புல்லாங்குழலும், சந்தூரும் எப்படி பரதம் ஆடுகிறது என்று பாருங்கள்.... என்னுள்ளில் இருக்கும் ஜீவனை தேடி வெளிக்கொணரும் பாடல். எப்படி இப்படி உள்ளதை கொள்ளை கொள்கிறது. இரவின் மடியிலே தூங்காத விழிகளுக்கு ஆறுதல் தரும் இசையுடன் கவிநயம் கூடிய பாடல். -இதோ உங்களுக்காக..
┈┉┅━❀••🌿🍁🌺🍁🌿
🎬 : ரோசாப்பூ ரவிக்கைகாரி (1979)
🎻 : இளையராஜா
🖌: புலமைப்பித்தன்
🎤 :வாணி ஜெயராம்
┈┉┅━❀••🌿🌺🌿
பாடல் வரிகள்:
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில் ஆ ...
பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே சேராதோ
(என்னுள்ளில்)
மஞ்சளைப் பூசிய மேகங்களே
மேகங்களே மோகன்களே
மல்லிகை மாலைகளே ஆ ....
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காளைகளே
சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ
(என்னுள்ளில்)
No comments:
Post a Comment