கண் முன்னால் இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க இயலாச் சூழலில் நமக்கு ஏற்படுவது மனப்போராட்டம் ( Conflict ) எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
01) அணுகுதல் - அணுகுதல் மனப்போராட்டம்:
இரண்டுமே நன்மை தரும் சூழல்களாக இருந்தால் அதில் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நன்றாகப் படித்த மாணவனுக்கு மருத்துவம் / பொறியியல் இரண்டையுமே மிகச் சிறந்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைப்பதைப் போல...
( மிஸ் யுனிவர்ஸ்- மிஸ் வோர்ல்ட் இரண்டு பேரும் வந்து ஒரே நேரத்தில் ஃபுரோபோஸ் பண்றாங்கன்னு வைச்சுக்கோங்களேன்... எதை செலக்ட் பண்றதுன்னு வர்ற குழப்பம் )
இந்தப் போராட்டத்தின் தாக்கம் மிகவும் குறைவு. ஏனெனில் எதைத் தேர்வு செய்தாலும் கிடைப்பது நன்மையே என்பதால்...
02) அணுகுதல் - விலகுதல் மனப்போராட்டம்:
நன்மை தருகின்ற பிடிக்காத ஒன்று மற்றும் தீமை தருகின்ற பிடித்த ஒன்று ஆகிய இரண்டில் இருந்து ஏதேனும் ஒன்றினைத் தேர்வுச் செய்ய வேண்டிய சூழலில் எழுகின்ற மனப்போராட்டம் இது.
புகைக்கு அடிமையான ஒருவன் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகின்ற போது அதை முயன்று விட்டுவிட்டால் உடலுக்கு நலம்; ஒருவேளை அதை விட முடியாமல் புகை பிடிப்பானாயின் உடலுக்குத் தீமையாக இருந்தாலும் கூட மனதுக்கு பிடித்துள்ளதே என்று சமாதானம் கூறிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
( மிகவும் அழகான ஏழையான இளம்பெண் - வயது மூத்த அழகற்ற ஆனால் வசதிகள் நிறைந்த பணக்காரப் பெண்... இருவரில் யாரை மணந்து கொள்வது என்ற குழப்பம் )
இந்தப் போராட்டம் சற்று கடுமையானது. மனதுக்குப் பிடித்த தீமையைத் தேர்வு செய்வதா அல்லது மனதுக்குப் பிடிக்காத நன்மையைத் தேர்வு செய்வதா?
03) விலகுதல் - விலகுதல் மனப்போராட்டம்:
இரண்டுமே தீமை தருவதாக உள்ள நேர்வுகளில் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம்...
இரண்டுமே பிடிக்கவில்லை... இரண்டில் எதைத் தேர்வு செய்தாலும் அதனால் கிடைப்பது தீமையே...
ஆயினும் அவற்றுள் ஒன்றினைக் கட்டாயமாகத் தேர்வு செய்தாக வேண்டும் என்ற நிலை வரும் போது ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற போராட்டமே இது...
"between the devil and the deep sea" என்பதைப் போல...
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போல முடிவெடுக்க இயலாமல் இப்படியும் அப்படியும் அலைந்து அலைந்து களைத்துப் போவது...
அப்படியே ஒரு முடிவினை எடுத்தாலும் கூட அதனால் விளைவதும் மனதுக்கும் பிடிக்காத தீமையே என்கிற போது அங்கே மனதினை ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் வழியில்லை...
அடர்ந்த காட்டுக்குள் சென்ற ஒருவனை பசியுடன் இருக்கும் புலி துரத்தியது... அவனோ ஓடினான்... வழியில் ஒரு பெரும்பள்ளத்தில் தவறி விழுந்தான்... அங்கிருந்த ஒரு கொடியினைப் பற்றிக் கொண்டு பாதியில் தொங்கிக் கொண்டு இருக்கிறான்...
பள்ளத்திற்கு மேலே பசித்த வயிற்றுடன் திறந்த வாயுடன் புலி நிற்கிறது...
அதே நேரத்தில் பள்ளத்தில் தொங்கிக் கொண்டுள்ளவன் பிடித்துள்ள கொடியின் வழியாக மலைப்பாம்பு ஒன்று மேலேறி வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...
இப்போது அவன் நிலை என்ன? கொடியின் வழியாக மேலேறிச் சென்று புலிக்கு இரையாவதா? கீழிறங்கிச் சென்று மலைப்பாம்பிடம் மாட்டிக் கொள்வதா?
மாரீசனின் நிலையும் தற்போது அப்படித்தான் உள்ளது.
மானாக வேடமிட்டுச் சென்றால் இராமனின் வில்லுக்கு பலியாக வேண்டும்...
மாய வேடமிட்டு செல்ல மறுத்தால் இராவணனின் வாளுக்கு இரையாக வேண்டும்...
கம்பர் மிகவும் அழகான அற்புதமான உவமையைக் கூறுகிறார்...
அதுவும் மிகவும் பொருத்தமான... இதைக் காட்டிலும் சிறப்பான ஓருவமையை இந்தச் சூழலுக்குக் கூறமுடியாது என்றவாறு ஓருவமையைக் கூறுகிறார்.
நீர் நிறைந்துள்ள ஆழமான குழியில் ஒரு மீன் வாழ்ந்து வந்தது.
அந்த நீரில் கொடிய நஞ்சு தற்போது கலக்கப்பட்டு விட்டது.
இந்தச் சூழலில் அந்த மீன் என்ன செய்யும்?
நஞ்சு கலந்த நீர்க்குழியில் இருந்தாலும் இறப்பு...
நீர்க்குழியை விட்டு வெளியே வந்தாலும் சாவு...
வாழலாம் என்று வந்தபோது அந்த நீரில் நஞ்சு இல்லை... இத்தனை நாட்களாக இராவணன் ஆட்சியில் இருந்த போது எவ்வித இடையூறும் இல்லாதது போல...
தற்போது நஞ்சு கலந்ததைப் போல இராவணனுக்குத் தோன்றிய பெருங்காமத்தால் மாயமானாகச் செல்ல வேண்டிய கட்டாயம்...
தற்கால உளவியல் உரைக்கிறது...
ஒருவனுக்கு எழுகின்ற மனப்போராட்டங்களிலேயே மிகவும் கடுமையானதும் கொடுமையானதுமான போராட்டம் இதுவேயென்று...
இதைத்தான் கம்பன் அன்றே சொன்னான்...
அவனுடைய நெஞ்சடைந்த வேதனை நிலைமையை நினைக்கவும் இயலாது; சொல்லவும் முடியாது என்று...
~ தகடூர் ப.அறிவொளி.
No comments:
Post a Comment