கேரளா பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் இருக்கும் ஒரு தேக்கு மரம்.
"கன்னிமரா" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்ற உயிர்மரம் இது.
ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் பழமையானது; எட்டுத் தலைமுறைகளைக் கண்டது; இன்றும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பது.
அருகே சென்று நின்ற போது அதன் விரிவினை எண்ணி வியப்புற்றேன்; தொட்டுத் தடவும் போது அதன் திண்மையை எண்ணி திகைப்புற்றேன்; நிமிர்ந்து பார்க்கும் போது அதன் உயர்வை எண்ணி உவகை கொண்டேன்.
இருக்கும் இடந்தாண்டி ஓரெட்டு வைக்க இயலாது... ஆயினும் என்ன?
எத்தனை ஆயிரம் காததூரங்கள் பறந்து வந்தப் பறவைகளின் பாதங்களை அதன் கிளைகள் தாங்கிக் கொண்டிருக்கும்...
எத்தனை நூறு மைல்கள் நடந்து வந்த விலங்குகளின் வெம்மையை நீக்கி குளிர்மையைக் கொடுத்து... களைப்பினை நீக்கி இளைப்பாறுதல் தந்து தாயின் நிலையில் தன்னையே தந்து உதவியிருக்கும்...
இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு குளிர்ச்சியைக் கொடுத்து மேகங்களை மழைபொழியத் தூண்டி மண்ணுக்குத் தாய்ப்பாலாம் தண்ணீரைத் தந்திருக்கும்...
காற்றினைத் தூய்மையாக்கி உலகத்தின் உயிர்கள் வாழ்வதற்கான உயிர்வளியைக் கொடுத்து கடவுள் நிலையில் நின்று வரங்கொடுத்திருக்கும்...
வெயிலுக்கு உதவா வெறுநிழல் கொண்ட அற்ப மானிடப் பதர் நான்...
தாயே ! நன்றியுடன் உன்னைப் போற்றுகிறேன்...
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தில் ஏறக்குறைய 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது.
இதில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதி இந்தியாவிலேயே மிகப் பெரிய நீர்ப்பிடிப்புப் பகுதி ஆகும்.
மூங்கில் படகில் சென்ற போது அதை ஓட்டிச் சென்றவர் குறிப்பிட்ட சில செய்திகள் நாம் கவனிக்க வேண்டியவை.
ஏனெனில் கேரளம் தமிழ்நாட்டில் இருந்து எவ்வகையில் மாறுபட்டு விளங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
குறுங்கடலென காட்சி தருகின்ற அந்நீர்நிலை குடிநீராகப் பயன்படுகிறதாம்.
வருமானம் மிகுதியாக வருவதற்கு வாய்ப்பு இருந்தாலும் அங்கே இயந்திரப் படகுகளுக்கு அனுமதி இல்லை.
உள்ளூர்வாசிகள் அங்கங்கே பிடிப்பதைத் தவிர அந்நீர்நிலையில் மீன்களைப் பிடிப்பதற்கும் அனுமதி இல்லையாம்.
( ஏராளமான முதலைகள் உள்ளனவாம். ஆயினும் ஐம்பது கிலோ வரை எடையுள்ள மீன்களே அங்கு ஏராளமாக கிடைப்பதால் தவறி விழுவோர் பெருமளவில் முதலைகளால் பாதிப்பு அடைவதில்லையாம்.)
நெகிழிப் பயன்பாடு முற்றிலுமே இல்லை என்று சொல்லுமளவிற்கு கட்டுப்பாடு உள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
அதே போல குடித்து விட்டு வருவோரையும் அனுமதிப்பது இல்லையாம். உள்ளே வனப்பகுதியில் குடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டு உள்ளது.
படகில் சிறிது தூரம் பயணம் சென்ற பிறகு ஒரு சிறிய நிலப்பரப்பில் இறக்கி விட்டனர். சத்தம் போடாமல் அமைதியாக படமெடுத்துக் கொள்ள அனுமதித்தனர்.
அங்கே தூரத்தில் ஒரு யானைக்கூட்டம் தெரிகிறதா உங்களுக்கு... அதில் ஒரு குட்டி யானை இருந்தது... அவ்வளவு அழகு... ( என்னைப் போல...)
ஓரத்தில் இறங்கி இருகைகளால் அள்ளி அத்தண்ணீரைப் பருகினேன்... தெளிவான, சுவையான தண்ணீர்...
நான் சிறுவனாக இருந்த போது மதுரை பழமுதிர்ச்சோலையில் ஒரு சிறிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தனர். பளிங்கு போல் இருந்தது. ( சென்ற ஆண்டு சென்றபோது இப்போதைய நிலையைக் கண்டு வருந்தினேன்...)
கொல்லிமலைக்கு ஒருமுறை சென்றிருந்தேன்... மறக்க முடியாப் பயணம் அது... ஆயிரம் படிக்கட்டுகள் இறங்கிச் சென்று ஆகாசகங்கை அருவியை அடைந்த பிறகு... அந்தத் தண்ணீரின் குளிர்மையும், சுவையும் வாழ்வில் மறக்கவே முடியாது...
என் பிள்ளைப் பருவத்தில் நான் விளையாடித் திளைத்தது தொப்பூரில் உள்ள தொப்பையாற்றில்... தாகம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை... அத்தண்ணீரைக் கண்டாலே அள்ளிப் பருகத் தோன்றும்...
வனகுண்டா மலைக்குச் சென்று விறகு வெட்டி தலையில் சுமந்து நடந்து வருவோர் களைப்பை அத்தண்ணீரே போக்கியது... இன்று எங்கே சென்றாலும் சுத்திகரிக்கப்பட்ட கைதித்தண்ணீரையே குடிக்கிறோம்... ( குடுவையில் அடைக்கப்பட்ட சிறைபட்ட தண்ணீர் கைதியன்றோ...)
பத்து நாள்களுக்கு முன்பு உம்மியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றேன்... செல்லும் வழியில் தண்ணீரைப் பார்க்க விழைந்து விழிகளைத் திருப்பினேன்...
ஏமாந்து போனேன்... அங்கே தண்ணீர் மட்டும் காணாமல் போகவில்லை... ஆறு இருந்த அடையாளமே இல்லாமல் போயிருந்தது...


No comments:
Post a Comment