Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 16 March 2020

பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில்... தகடூர் ப. அறிவொளி


இன்று நண்பகல் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஈருளியில் வீடு திரும்பினேன்.

பொம்மிடி தாண்டி சில்லார அள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் கரும்புப்பால் குடித்து களைப்பாற்றிக் கொண்டேன். கருப்பஞ்சாற்றினை அருந்தும் போதே சில நினைவுக்கு வந்தன.

மொத்த தமிழ்நாட்டிலும் தகடூர் மண்ணுக்கு கரும்புடன் நெருங்கிய தொடர்பும் கூடுதல் உரிமையும் உண்டு.

அமிழ்தம் போன்ற மிகுந்த சுவையுடைய கரும்பினை விண்ணுலக சொர்க்கத்தில் இருந்து இங்கே கொண்டு வந்தவர் உன்னுடைய முன்னோரான அதியன் மரபினர் அல்லவா என்று ஔவை அதியமான் நெடுமான் அஞ்சியைப் புறநானூற்றில் புகழ்ந்து பாடுகிறார்.

அதியன் மரபினர் திரைகடலோடி திரவியம் தேடியவராதலால் தம் வணிகப் பயணத்தில் வெளிநாட்டில் இருந்து கரும்பினைக் கொண்டு வந்தனர் என்பதை அறிய முடிகிறது.

ஒருமுறை சொல்லினாலே அதைக் கேட்டு அதன்படி செயலாற்றுபவர் சான்றோர்கள் என்றும், கரும்பினைப் பன்முறைப் பிழிந்தால் மட்டுமே சாறு முழுமையும் கிடைப்பது போல நையப் புடைக்கும் போதே கீழோர்கள் பயன்படுவார்கள் என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.

"கச்சி இருக்கும் போது கரும்பானேன்! - கைக்குழந்தை
வைச்சி இருக்கும் போது வேம்பானேன்!!" என்று தன்மீது அன்புநிலை மாறிய தலைவனிடம் தலைவி புலம்புவதாக ஒரு நாட்டுப்புறப் பாடல் உள்ளது.

கரும்பினை வெட்டினாலும், கடித்தாலும், அடித்தாலும், பிழிந்தாலும் அது நமக்கு இனிமையான சாற்றினையே தருகிறது.

உண்ட உணவு மிகுதியும், கடினமும் ஆயின் அதைச் செரிக்கச் செய்ய எளிமையான வழி... ஒரு குவளை கரும்புப்பால் அருந்துவதே.

வெயிலின் கொடுமையில் இருந்து விடுபடவும் கருப்பஞ்சாறு பயன்படும்.

கரும்புப்பால் வடிகட்ட பயன்பட்ட தென்னை மரத்தின் பன்னாடை போன்றவர்கள் கடைமாணாக்கர்கள் என்று இலக்கணம் சுட்டுகிறது. பயனுள்ள கருப்பஞ்சாற்றினை கீழே செல்ல விட்டு தேவையற்ற சக்கைகளை மட்டும் தன்னிடத்தில் தேக்கி வைத்துக் கொள்வது போல...

பனிக்கட்டி சேர்க்காமல் ஒரு குவளை கரும்புப்பால் அருந்திய பிறகு வண்டியில் ஏறினேன்.

உயர்நிலைப் பள்ளியை ஒட்டியவாறு இருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. காண்பதற்கு மிகவும் அழகாகவும், பிஞ்சுப் பிள்ளைகளுக்கு பிடித்தாற் போலவும் அந்த ஓவியங்கள் விளங்கின.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஜீவிதாவை நிற்க வைத்து படமெடுத்ததும் அந்த ஓவியங்கள் இன்னும் கூடுதல் அழகாயின...

No comments:

Post a Comment