தமிழர்கள் வீரம் மிகுந்தவர்கள். அக்காலத்தில், பிறந்த குழந்தை இறந்தால் கூட. அதன் மார்பை கீறித் தான் புதைப்பார்கள். அவ்வளவு வீரம் விளைந்த மரபில் படைக்கு பிந்து என்ச் சொல்லியிருப்பார்களா?
பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்தி (முன்னதாக) உணவு பரிமாற வேண்டும்.
படைக்கிறவர்கள் (அதாவது விருந்து படைக்கிறவர்கள்) பிறகு சாப்பிடலாம் என்பதை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து எனக் கூறினார்கள்.
போருக்குச் செல்பவன் நேரமாகவே சாப்பிட்டு விட்டு (சாப்பிட்டவுடன் போருக்குச் சென்றால் களைப்படைந்துவிடுவான்) படை நடத்துபவனுக்கு பின்புலத்திலிருந்து ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்யவும்; தேவைப்படும்போது தேவையான ஆயுதங்களைக கொடுக்கும் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பது இதன் இன்னொரு அர்த்தம்.
பசி வந்திட பத்தும் பறந்து போகும்
சமைக்கும் போது பத்திப்போன சாப்பாடாக இருந்தாலும், பசியோடு இருப்பவன் கவனிக்காமல் சாப்பிட்டு விடுவான் என்பது போல தோன்றினாலும், ஈகை, இன்சொல், அறிவுடைமை, காதல், தவம், தொழில், தானம், கல்வி, மானம், குலப்பெருமை ஆகிய பத்து குணங்களும் பசி வந்திட பறந்து போகும் என்பதுதான் உண்மை.
இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆறு வயதிலும் மரணம் வரலாம்; நூறு வயதிலும் மரணம் வரலாம். ஆற்றில் போய் விழுந்தவனும் செத்தான்; நூல் நூற்று (கயிறு திரித்து) கழுத்தில் மாட்டியவனும் செத்தான். சாவை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம் என்போர் சிலர். கர்ணன் கதையில் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாக நான் இருந்தாலும் எனக்கு சாவுதான்; நூறு கௌரவர்களோடு இருந்தாலும் எனக்கு சாவுதான் என குந்திதேவியிடம் கர்ணன் சொன்னதாக கர்ண பரம்பரை கதைகள் உண்டு.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
மேலோட்டமாகப் பார்த்தால் இதற்கு எதற்கு ஒரு பழமொழி? இது எல்லோருக்கும் தெரிந்தது தானே எனத் தோன்றும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என இதற்கு உண்மையான விளக்கம் தருகிறார், வாரியார் சுவாமிகள்.
இதையே ஒருவன் வேடிக்கையாக இவ்வாறு குறிப்பிட்டார். குழந்தை இல்லாதவர்கள் சந்தான லட்சுமியை வேண்டுவார்கள். அந்த லட்சுமி கையில் ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கும். அதனால்தான் அவள் பெயர் SON' தான லட்சுமியாம். அந்த அழகான குழந்தையைத் தானமாக தருவாளாம்.
டாக்டர் பூங்கொடி ரவிக்குமார்
No comments:
Post a Comment