Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 30 July 2020

பக்தியின் ரகசியம்...

நாம் வழிபடும் இறை உருவங்களை, வெறும் கல்லாகவும், மண்ணாகவும் கருதாமல், நிஜம் என்று நினைத்தாலே இறைவன் ஓடி வந்து உதவிபுரிவான் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

ஒரு ஏழை குடியானவன், குடும்ப கஷ்டங்களால் அவதிப்பட்டு வந்தான்.

தன்னுடைய பணிக்காக அதிகாலையில் செல்லும் அந்த ஏழை, இரவு வேளையில்தான் வீடு திரும்புவான்.

எனவே அவனால் தினமும் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை.

இறைவனை வழிபட்டு தன்னுடைய துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால், வேலைப்பளு காரணமாக ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லையே என்று அந்தக் குடியானவன் வருந்தினான்.

ஒரு நாள் சிறிய கிருஷ்ணர் சிலையை வாங்கி வந்து, தன்னுடைய குறைகளைச் சொல்லி வழிபட்டு வந்தான்.

அவன் தினமும் பணிக்கு செல்லும் போதும், இரவு தூங்கும் வேளையிலும் கிருஷ்ணரின் சிலையை வணங்கினான்.

ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நறுமணப் பொருட்களை வைத்து வழிபட்டான். பல மாதங்கள் ஆகியும் அவனது வறுமை அகலவில்லை.

இதனால் கிருஷ்ணரின் மீது அந்தக் குடியானவனுக்கு கோபம் வந்தது.

‘நான் தினமும் இவரை வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கஷ்டத்தை இவர் கண்டுகொள்வதே இல்லை’ என்று நினைத்தவன், சந்தைக்குச் சென்று வேறு ஒரு சாமி சிலையை வாங்கி வந்தான்.

கிருஷ்ணர் இருந்த இடத்தில் இப்போது புதிய தெய்வத்தை வைத்த குடியானவன், கிருஷ்ணர் சிலையை அதற்கு மேல் உள்ள அலமாரியில் வைத்தான்.

பின்னர் புதிய தெய்வத்திற்கு எளிய வழிபாட்டைச் செய்தான். ஊதுபத்தியை கொளுத்தி புதிய சிலைக்கு அருகே வைத்தான்.

அந்த ஊதுபத்தியின் புகை மெல்ல மெல்ல, மேல்நோக்கிச் சென்று, அலமாரியில் இருந்த கிருஷ்ணரின் சிலை மீதும் பட்டது.

உடனே அந்த குடியானவன், ‘கிருஷ்ணா! இவ்வளவு நாட்களாக நான் உன்னை வழிபட்டும் எனக்கு எந்த கைமாறும் நீ செய்யவில்லை.

அப்படியிருக்கையில் புதிய தெய்வத்திற்கு ஏற்றிவைத்திருக்கும் ஊதுபத்தி நறுமணத்தை மட்டும் நீ அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டபடி, சிறிய பஞ்சை எடுத்து கிருஷ்ணர் சிலையின் மூக்கில் வைத்து அடைத்தான்.

அடுத்த கணமே அந்த குடியானவனின் முன்பாக வந்து காட்சிகொடுத்தார் கிருஷ்ணபிரான். மெய்சிலிர்த்தான் குடியானவன்.

‘பக்தா! என்னை மண்ணாக பாவிக்காமல், உயிருள்ளவன் என்று எண்ணி பஞ்சை வைத்து அடைத்தாயே. அந்த பக்தியால் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்றார் கண்ணன்.

குடியானவனின் விருப்பப்படியே அவனது வறுமையைப் போக்கி அருளினார்.

நாம் வழிபடும் இறை உருவங்களை, வெறும் கல்லாகவும், மண்ணாகவும் கருதாமல், நிஜம் என்று நினைத்தாலே இறைவன் ஓடி வந்து உதவிபுரிவான். அதுவே பக்தியின் ரகசியம்.

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...