Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 1 January 2021

அகரம் தொடங்கி ஔகாரம் ஈறாக பன்னிரண்டும் உயிர் எழுத்துகள்.

இந்தப் பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் ஒருமையைக் குறிக்கும் சொற்கள் வந்தால் அதற்கு  முன்னே "ஓர்" என்று எழுத வேண்டும்.


ஓர் அணில்

ஓர் ஆடு

ஓர் இலை

ஓர் ஈ

ஓர் உரல்

ஓர் ஊர்

ஓர் எருது

ஓர் ஏர்

ஓர் ஐயம்

ஓர் ஒட்டகம்

ஓர் ஓடம்

ஓர் ஔடதம்


உயிர்மெய் எழுத்துகளில் ஒரு சொல் வந்து ஒருமையைக் குறிக்க வேண்டுமெனில் அதற்கு முன் "ஒரு" என்று எழுத வேண்டும்.


ஒரு கடிதம்

ஒரு காதல்

ஒரு செடி

ஒரு பூ

ஒரு நூல்

ஒரு தவிப்பு

ஒரு மனம்


இப்போது உங்கள் அனைவருக்கும் எளிதாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


ஆங்கிலத்தில் vowel sound வருகின்ற சொற்களுக்கு முன்னே an என்றும்,

consonant sound தொடங்கும் சொற்களுக்கு முன்னே a என்றும் சேர்த்து singular கூறுகின்றோம் அல்லவா? 

அதற்கு இணையாக இந்த ஓர் - ஒரு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


(சிற்சில இடங்களில் செய்யுளில் வரும் போது யாப்பிலக்கணம் பொருந்துவதற்காக,  மாத்திரை அளவிற்காக விதிவிலக்குகளும் உண்டு.


அந்த இடங்களில் உயிர்மெய்க்கு முன்பு ஓர் என்றும் வரும்.


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் என்பது திருக்குறள்.)


இப்போது உங்களிடம் ஓர் எளிய வினாவினைக் கேட்கப் போகிறேன்.


"அறிவொளி" என்ற சொல்லுக்கு முன்னால்

ஓர் என்று வருமா? 

ஒரு என்று வருமா?


அறிவொளி என்ற சொல் "அ" என்ற உயிரெழுத்தில் தொடங்குகிறது. எனவே அத்தனைப் பேரும் "ஓர்" என்று தானே கூறினீர்கள்.

மிக்க மகிழ்ச்சி.


அதே போல  உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்பு இரண்டினைக் குறிப்பிட வேண்டியிருந்தால்  "ஈர்" என்று தான் எழுத வேண்டும்.


"இரு இலை" என்று எழுதக் கூடாது. 

"ஈர் இலை" என்று தான் எழுத வேண்டும்.


இரண்டு சக்கரங்கள் இருக்கும் வண்டியை "ஈருருளி" என்று தானே அழைக்கிறோம்.


அடிப்படையாக ஒரு விதி உள்ளது. 

நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்து நின்று வருமொழியின் தொடக்கம் உயிரெழுத்தாக வந்தால் அதை உடனடியாக புணர்த்தி எழுத வேண்டும்.


"உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்று தமிழ் வகுப்புகளில் கேட்டது நினைவுக்கு வந்திருக்குமே... 

மிக்க மகிழ்ச்சி...


அப்படியாயின் மேலே கூறிய காட்டுகளில் உள்ளவற்றை ஓரணில், ஓராடு என்றவாறு புணர்த்தி எழுதுவதே மிகவும் சரியான முறையாகும்.


அதே போல் "ஈர் இலை" என்றவாறன்றி "ஈரிலை" என்று எழுதுவதே சாலச் சிறந்தது.


நாம் அனைவரும் பலமுறை கேட்டுள்ள ஒரு தொடரினை இப்போது நினைவுபடுத்துகிறேன்.


"ஈருடல்  ஓருயிர்" 


இரண்டு உடல்களுக்கு இடையே உலவுகின்ற‌ ஒற்றை உயிரென்ற கருத்தமைந்த தொடர்.

இலக்கணப்படி வந்துள்ள அழகினைக் காணுங்கள்.


"ஓராறு முகமும் 

ஈராறு கரமும்

தீராத வினைதன்னை

தீர்க்கும்" என்று அழகன் முருகனைப் போற்றும் வரியினில் வந்துள்ள இலக்கணம் நன்கு புரிந்திருக்குமே தற்போது.


இன்னும் ஒரேயொரு கேள்வி மட்டும் உங்களிடம் கேட்கட்டுமா?


இன்று பிறந்துள்ள பன்னாட்டுப் புத்தாண்டினை எவ்வாறு கூறுவது மிகவும் சிறப்பானது?


இரண்டாயிரம் என்றா?

ஈராயிரம் என்றா?


ஆயிரம் என்ற சொல் "ஆ" என்ற உயிரில் தொடங்குவதால் அதற்கு முன்பு "ஈர்" என்று வருவது தானே சிறப்பு.


அவ்வாறாயின் "ஈர்  ஆயிரம்" என்பது தானே சரி.


அதைப் புணர்த்தி "ஈராயிரம்" என்பது தானே மிகவும் சரியானது. 


அண்மையில் நண்பர் அண்டனூர் சுரா மூலமாக நான் அறிந்து கொண்ட ஒரு சுவையான தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


நம்முடைய நாட்டின் பணத்தாளில் "இரண்டாயிரம் ரூபாய்" என்று தான் உள்ளது. 

ஆனால் மொரீசியஸ் நாட்டின் பணத்தாளில் "ஈராயிரம் ரூபாய்" என்று மிகவும் சரியாக உள்ளது.


எனவே இந்தப் புத்தாண்டு

"ஈராயிரத்து இருபத்து ஒன்றாம் ஆண்டு- 2021"


இன்னும் சேர்த்தெழுதினால்

"ஈராயிரத்திருபத்தொன்றாமாண்டு-2021"


தமிழின் சிறப்புகளில் ஒன்று என்ன தெரியுமா?

இயன்றவரையில் பதங்களைப் புணர்த்தியெழுதுதலேயாம்... 


பிரிவினைக் காட்டிலும் சேர்க்கையே சிறப்பென்று இலக்கணம் கூறுகிறது...

No comments:

Post a Comment