இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அரவிந்தனைச் சந்தித்தேன். பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான். அவனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஏனோ என் முகம் அவனுக்கு நினைவில்லை . அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் என்னுடைய நண்பர். அவரிடம் போய் அரவிந்தனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று அனுமதி பெற்றுக் கொண்டு ஒரு டீக்கடைக்கு அழைத்து வந்தேன். ஒரு பெரும் தயக்கத்தோடு என் கூட வந்தான். குற்ற உணர்வாய்க் கூட இருக்கலாம்.
அப்போது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்தோம். அரவிந்தன் மிக நன்றாகப் படிப்பவன். நானொரு தான்தோன்றி. பாடத்தை வகுப்பில் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்தெல்லாம் புத்தகத்தைத் திறந்ததேயில்லை. பார்டர் லைனிலாவது பாசாகி விடுவேன் என்று அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியும்.
அவர்களும் நீ இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதெல்லாம் கிடையாது.
ஒருநாள் அப்பா என்னிடம், 'நீ ஒரு டாக்டர் ஆகவேண்டும்' என்று கூறிய போது, 'நான் ஒரு பஸ் கண்டக்டராகவே ஆசைப்படுகிறேன்' என்று கூறியதால் அவர் என்னை ஒரு 'சில்லறைப் பயல்' என்று அடையாளம் கண்டுகொண்டு ஒதுங்கி விட்டார்.
அப்பாவின் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், "நீ என்ன கேவலமான மார்க் எடுத்தாலும்கூட உன்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட்டுத் தருவேன்! என் கையெழுத்தை மட்டும் கேவலமாக வரைந்து அசிங்கப் படுத்தாதே!" என்பதுதான். அவரது கையெழுத்து ஒரு மிகப்பெரிய முட்டையில் துவங்கி குட்டி குட்டி முட்டைகளாக எதிர்த் திசையில் போய் சோகமாக முடிவடையும். கீழே ஒரு கோடு போட்டு அன்றைய தினத்தைக் குறித்து கல்வெட்டாய் உருவேற்றுவார்.
பிட் எழுதுகிற நேரத்தில் அந்தப் பாடத்தைப் படித்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் நான் பிட் எழுதிக்கொண்டு போயெல்லாம் பரீட்சை எழுதியதில்லை. தேர்வு வேளையில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைச் சீண்டி அவர்களது விடைத்தாளைத் தங்களுக்குக் காட்டுமாறு பல்லிளிக்கும் சக மாணவர்களை நான் மதிப்பதேயில்லை.
தங்களது விடைத்தாளை ஒளித்து வைத்து எழுதும் மாணவர்களை நான் கால் காசுக்கு பெறாதவர்கள் என்று முகத்தில் துப்ப எண்ணியதுண்டு. அரவிந்தும் அப்படிப் பட்டவன்தான். ஆனால் என்னுடைய நெருங்கிய நண்பன். எங்கு சென்றாலும் என்னோடே கூட வருவான். கிரவுண்டுக்கு விளையாடப் போனாலும் அவனோடுதான். நாகர்கோவிலில் மொத்தம் நான்கே சாலைகள்தான். அதில் எங்கள் கால்கள் படாத மூலை முடுக்கே கிடையாது.
என்னிடம் அப்போது ஒரு ஹீரோ ஜெனரேஷன் எக்ஸ் சைக்கிள் இருந்தது. நாங்கள் பெரும்பாலும் டபுள்ஸ்தான் போவோம். அவன் என்னைவிடவும் கனத்த சரீரம் உடையவன். ஆனாலும் அவனை முன்பக்கம் பாரில் உட்கார வைத்து நான் மிதிப்பேன். அவன் இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு வருவான். சாயங்காலம் நான்தான் அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விடுவேன்.
அவனது வீடு பள்ளியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. எனக்கு அவ்வளவு தூரம் வரைக்கும் பயணிக்க வீட்டில் தடை இருந்தது. ஆறு மணிக்கு முன்னால் வீட்டில் போய் உட்காரவில்லையென்றால் அடுத்த நாள் சைக்கிள் சீட்டில் உட்கார முடியாது.
ஒரு தேர்வு நாளொன்றில் அரவிந்தன் தன்னுடைய மேதமைத் தனத்தைக் காட்ட எண்ணி சக பாவப்பட்ட மாணவன் தன்னுடைய விடைத்தாளைக் காட்டுமாறு துன்புறுத்துவதாக ஒரு குடிகார ஆசிரியரிடம் காட்டிக் கொடுக்க அந்த மகான் அவனை விடைத் தாளோடு சேர்த்து வெளியில் வீசிவிட்டார். அன்றுதான் முதன் முறையாக அரவிந்தன் மீது தீராத கோபம் வந்தது.
எனக்குக் கோபம் வந்துவிட்டால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியாது என்பது அரவிந்தனுக்கு அன்றுதான் தெரிந்தது. அரவிந்தனின் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. மூக்கிலும் முட்டியிலும் சிராய்ப்பு.
அதோடு நில்லாமல் பள்ளியின் பின்பக்கம் போய் நின்று கொண்டு அந்தக் குடிகார ஆசிரியரின் நெஞ்சில் சரளைக் கல்லை குறிபார்த்து எறிந்ததில் குறி தவறாமல் அவரது மண்டை கீறியது. பெரும் பஞ்சாயத்து நடந்து முடிந்தபின்பு அரவிந்தனுக்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளி.
ஒரே வகுப்பில் இருந்தாலும் வேறு வேறு கிரகத்தில் அமர்ந்திருந்தோம். அவனது பிரிவை என்னால் தாங்கவே முடியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின்பு அந்த ஆசிரியரை எல்லாரும் “மண்டகீறி மாணிக்கம்” என்று அழைத்தது வேறு எனக்கு இன்னொரு தலைவலியை உருவாக்கியது.
அவர் தேவையில்லாமல் என்னைச் சீண்டி எப்படியாவது என்னை டீ சி கொடுத்து வெளியில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒருமுறை என்னை அவதூறாகப் பேசியதால் நான் மதியம் வீட்டுக்குச் சென்று தாத்தாவின் கத்தியை எடுத்து வந்து மாணிக்கத்தின் ஸ்கூட்டர் சீட்டைக் கிழித்து பஞ்சை எடுத்து நேராக அவரிடம் சென்று ,
“இன்னிக்கி கிழிஞ்சது உம்ம வண்டிக்க சீட்டு பஞ்சி ! இனிமேலால் வம்புக்கு வந்தீருன்னா கிழிஞ்சிரும் ஒமக்க நெஞ்சி ! அவ்ளதாம் பாத்துக்காரும் !”
என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் அவர் தொல்லை தரவில்லை. அவரது உயிர் அவரைவிட்டுப் பிரிவதை அவர் விரும்பவில்லை போலும்...
ஆனாலும் அரவிந்தன் என்னிடம் பேசவேயில்லை. என்றாவது ஒருநாள் பேசிவிட மாட்டானா என்று ஏங்கிப் போயிருந்தேன். அவனில்லாமல் என்னிடம் யார் யாரோ பேச முயன்று தோற்றுப் போனார்கள். நானும் யாரிடமும் நெருங்கவேயில்லை. இன்னுமொரு நட்பு எனக்குத் தேவையில்லாமல் போயிருந்தது. எப்போதும் தனிமை.
அப்படியிருக்கும் போது ஒருநாள் அரவிந்தன் என்னை அவனது வீட்டிற்கு சனிக்கிழமை வருமாறு அழைத்ததாக தகவல் சொல்லி அனுப்பினான். அன்றுதான் எனக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் எல்லாமே... அன்றிரவு முழுக்க எனக்குத் தூக்கமேயில்லை. சனிக்கிழமை வந்தது. எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து அவனது வீட்டிற்குச் சென்றேன். மனம் முழுக்க படபடப்பு... என்ன சொல்வானோ ? நான் என்ன பேச ? அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். அவனது அம்மா கதவைத் திறந்தாள்.
“நீதானே ! அரவிந்தனுக்க வாய அடிச்சி ஒடச்ச ? அப்பொரம் எதுக்குப்போ இங்க வந்த ? அவனுக்கு ஒன்னய பாக்க இஷ்டமில்லியாம் ! கிளம்பு !”
நான் கெஞ்சினேன், "அம்மா ! ஒரே ஒரு தடவ அவன பாத்துட்டுப் போயிர்றேன்! அவன கூப்புடுங்கம்மா !"
அவள் செவி சாய்க்கவில்லை. என் கூக்குரலை பலர் தெருவில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போனார்கள். சத்தமாகக் கத்தினேன்.
"அரவிந்தா இதுக்கா என்னய இவ்ளோ தூரம் வர வச்ச ?"
என்னுடைய கண்ணீர் நிற்கவில்லை. சைக்கிள் டயர் வேறு மூச்சை விட்டிருந்தது. அதற்கு என்ன துக்கமோ ? சைக்கிளைக் கையில் பிடித்துக் கொண்டு அரை டவுசரோடு சாலையில் அழுது கொண்டே தனிமையில் நடந்து வந்த பரிதாபத்துக்குரிய அந்த நாளை இன்றைக்கு நினைத்தாலும் அழுகை வரும்.
பஞ்சர் ஒட்டக் கூட கையில் காசு இல்லை. நான் இவ்வளவு தூரம் வரும் விஷயம் வீட்டிற்குத் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது ஆகையால் எதுவும் சொல்லவில்லை. வீடு வந்து சேர ஐந்து மணிநேரங்கள் ஆகிப் போயிருந்தன.
'அரவிந்தன் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் ? என்னைக் கேவலப் படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால் அடித்திருக்கலாம்... என்னை அம்மணமாக ஓட விட்டிருக்கலாம் ? ஏன் இப்படி காயப் படுத்தினான் ? இப்படியெல்லாமா ஒருவனைப் பழி வாங்குவார்கள் ? அவனது அன்பை நாடிப் போனது தவறே இல்லை ! ஆனால் அதற்காக இப்படியா ?" என்னால் துக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
உடைந்து அழுதபடியே சாலையில் நடந்த அந்த ஐந்து மணிநேரங்கள் வாழ்வில் மறக்க முடியாதது. அன்றைக்கு அப்பாவிடம் போய் அழுது புலம்பி, "நான் இனிமேல் அந்தப் பள்ளிக்குப் போகவே மாட்டேன்!" என்று சொல்லி அடுத்தநாள் அப்பா போய் டீசி வாங்கி வந்து என்னை வேறொரு பள்ளியில் சேர்த்தார். புது நண்பர்கள், புது தோழிகள் என்று எல்லாம் மாற ஆரம்பித்தன... அரவிந்தனின் அந்த பழிவாங்கல் மட்டும் மனதை விட்டு அகலவேயில்லை.
இருபது வருடங்களுக்கு முன்பு அன்றைக்கு என்னை சந்திக்க விரும்பாத அரவிந்தன் இதோ பாரத் பெட்ரோலியம் சீருடையில் டீக்கடையில் என் முன்பாக அமர்ந்திருக்கிறான்.
"அரவிந்தா ! நீ மட்டும் அன்றைக்கு என்னை வெளியில் வந்து பார்த்திருந்தால் ?"
வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தன. எனக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான். நான் மீண்டும் கேட்டேன்.
"என்னை ஏன் உதாசீனப் படுத்தினாய் அரவிந்தா ?"
இம்முறை நான் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். டீக்கடையில் எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். அரவிந்தன் குனிந்து உட்கார்ந்து அழுததில் அவனது கண்ணீர் டீ கிளாசில் விழுந்தது. கொஞ்ச நேரம் அமைதி. எழுந்து காரை நோக்கி நடந்தோம். அந்தச் சூழல் சகஜமாக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. அரவிந்தன் தன்னுடைய மவுனத்தைக் கலைத்தான்.
"நீ அப்போ அவ்ளோ புஸ்கு புஸ்குன்னு இருப்ப ? இப்ப தாடியெல்லா வச்சி சந்நியாசி மாறி ஆயிட்டியே ?"
"அப்போ கல்யாணம் ஆகலைல்லா மக்கா! எங்கிட்ட வேற என்ன வித்தியாசம் தெரியிது அரவிந்தா ?"
"அப்போ மாட்டுன டவுசர இப்பவும் கழத்தல பாத்தியா ?"
அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு மீண்டும் அழுதேன். நட்பு ஒன்று மட்டும்தான் எல்லார் முன்பாகவும் நம்மைக் கொண்டு போய் நிறுத்தும். மண்டியிடச் செய்யும். அழ வைக்கும்! ஆனாலும் சாகும் வரைக்கும் வாழ்வதுதான் வாழ்வு.
அன்பென்பது ஒரு அரைவேக்காடு ! அதற்கு கண்ணும் கண்ணும் தெரியாது!
- பிரபு தர்மராஜ்
No comments:
Post a Comment