விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி?
விண்வெளி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது, பூஜ்ஜிய ஈர்ப்பு விசை (Zero gravity) சூழலில் மிதப்பதுதான்.
ஆனால் அத்தகைய சூழலில் பல நாட்களுக்கு வாழ்வது எளிதல்ல.
இந்த நிலையில் அவர்களது தினசரி வாழ்க்கையில்
சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் 1998இல் கட்டமைக்கப்பட்டது. 109 மீட்டர் நீளத்தில் (356 அடி) ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியதான இந்த நிலையம்
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது.
அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.
இவர்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகள் :
விண்வெளி வீரர்களுக்கு பூஜ்ஜிய ஈர்ப்புவிசை நிலையில் அதிக நாட்கள் இருக்கும்போது அவர்களது தசை வலிமையும், எலும்பின் அடர்த்தியும் குறையும்.
அதுமட்டுமல்லாது உடல் எடை குறைவது, பார்வைத்திறனில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் மாற்றம் ஆகியவையும் பல நாட்களுக்கு விண்வெளியில் தங்குபவர்களுக்கு ஏற்படும்
விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்,
ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.
(அதுவே பூமியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% வரை மட்டுமே எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்.)
இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான காலம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது.
பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.
உணவுப் பழக்கம் :
சத்தான உணவுகள், முழுமையான உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே அவர்களை விண்வெளியில் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
இதற்காக அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சோதனைகள் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன
சர்வதேச விண்வெளி நிலைய வீரர்களுக்கு 300 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
அவை விண்வெளி வீரர்களுக்குச் சிறிய பாக்கெட்டுகளில் வழங்கப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட உணவுகள் உறைய வைக்கப்பட்டு, அதிலிருக்கும் நீர் முழுமையாக வெளியேற்றப்படும்.
இவ்வாறு நீர் வெளியேற்றப்படுவதற்கு காரணம், அதை எளிதாக சேமித்து வைக்கலாம் என்பதால் விண்வெளி வீரர்கள் உணவுகளை மீண்டும் தண்ணீரில் சூடாக்கி அல்லது குளிர்வித்து சாப்பிடுவார்கள்.
தேநீர், காபி, ஆரஞ்சு சாறு மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் இந்த முறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
நட்ஸ், பிஸ்கெட்டுகள், பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழங்கள்) போன்ற அப்படியே உண்ணக்கூடிய உணவுகளும் வீரர்களுக்கு அளிக்கப்படும்.
கழிவறைகள் மற்றும் குளியலறைகள்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியில் உள்ளதைப் போன்ற கழிப்பறை இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை இருப்பதால், அதில் அமரும் முன் அந்த இருக்கையில் இருக்கும் பெல்ட்டுகளை மாட்டிக்கொள்ள வேண்டும்.
கழிவுகளைக் கையாள நீருக்கு பதில் காற்று பயன்படுகிறது.
அதாவது ஒரு வேக்யூம் கிளீனர் (Vaccum cleaner) செயல்படுவது போல. கழிவுகள் மிதக்கக்கூடாது என்பதற்காக அவை உடனடியாக உறிஞ்சப்படும்.
இந்தக் கழிவுகள் பின்னர் மொத்தமாக அப்புறப் படுத்தப்படும்.
இந்தக் கழிவுகள் கவனமாக சேகரிக்கப்பட்டு, விண்கலங்களில் ஏற்றப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது அவை விடுவிக்கப்படும்.
வளிமண்டல வெப்பம் அவற்றை முழுமையாக எரித்துவிடும்.
இதேபோன்ற முறையில் சிறுநீரும் உறிஞ்சப்படும். ஆனால் அவை அப்புறப் படுத்தப் படுவதில்லை.
கழிவு நீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன் படுத்தப்படுகிறது.
இந்த நீர் பூமியில் கிடைக்கும் குடிநீரை விட சுத்தமானது.
கழிப்பறைக்கு கதவுகள் கிடையாது, ஒரு திரைச்சீலை மட்டுமே பயன் படுத்தப்படுகிறது.
குளிரூட்டும் மின்விசிறிகள், கழிப்பறை மோட்டார் மற்றும் விண்வெளி நிலையத்தின் பல இயந்திரங்களின் செயல்பாடுகள் காரணமாக, கழிப்பறையில் எழும் ஒலிகள் வெளியே கேட்பது தவிர்க்கப்படுகிறது.
குளிப்பது என்பது இங்கே சாத்தியமில்லை.
திரவ சோப் கொண்ட ஈரமான துண்டைப் பயன்படுத்தி உடலைத் துடைக்க முடியும்.
தலைமுடியைக் கழுவ, தண்ணீர் இல்லாமல் வேலை செய்யும் ஷாம்பூவைப் பயன்படுத்திவிட்டு, உலர்ந்த துண்டு கொண்டு துடைக்கலாம்.
கைகள், முகத்தை சுத்தப்படுத்த திரவ சோப் கொண்ட டிஷ்யூக்கள் அல்லது ஈரமான துண்டு மூலம் துடைக்க வேண்டும்.
விண்வெளி வீரர்கள் தூங்குவது எப்படி?
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையால், தூங்கும் வீரர்கள் அங்குமிங்கும் மிதந்து சென்று, காயமடையக் கூடிய அபாயம் உள்ளதால், விண்வெளி வீரர்கள் தங்கள் உடலை, விண்வெளியில் தூங்குவதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறிய பெட்டிகள் அல்லது பைகளுடன் இணைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்.
விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் ஒரு நாளில் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களைக் காண முடியும்.
அதுமட்டுமல்லாது அங்கு நிறைய உபகரணங்கள் இருப்பதால், குளிரூட்டும் மின்விசிறிகள் மற்றும் இயந்திரங்களின் ஒலி எப்போதும் இருக்கும்.
இந்த சுற்றுப்புற இரைச்சல்களால் தூங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க விண்வெளி வீரர்கள் கண் கவசங்கள் மற்றும் காது அடைப்பான்களை (Ear plugs) பயன் படுத்துகிறார்கள்.
தசை வலிமை மற்றும் எலும்பின் அடர்த்தி குறைவதைத் தடுக்க, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் ஒருநாளைக்கு 2 முதல் 2.5 மணிநேரம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகளும், டிரெட் மில் மற்றும் சக்கரங்கள் இல்லாத ஒரு உடற்பயிற்சி சைக்கிளும் உள்ளது.
பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தான் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளார்கள்.
விண்வெளி ஆராய்ச்சி மனித குல வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதால் பல நாடுகள் தொடர்ந்து வீரர்களை விண்வெளிக்கு அனுப்புகின்றன.
இந்தியாவும் அதில் ஒன்று.
(இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன். BBC க்கு அளித்த பேட்டியில் இருந்து.)
No comments:
Post a Comment