ஏன் அந்த பிஸ்கட் தான் வேணும்ன்னு அடம் புடிச்சேன்னு கேளுங்க...
நீங்க கேக்கலன்னாலும் நான் சொல்லுவேன்...
ஏன்னா அந்த பிஸ்கட் தான் சக்திமான் சாப்பிடுற பிஸ்கட்...
இப்ப சக்திமான் யாருன்னு கேளுங்க... நீங்க கேக்கலன்னாலும் சொல்லுவேன்...
அவர் தான் ஒவ்வொரு வாரமும் டிவியில வந்து யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் தீர்த்திடுவாரு...
நிலம்,நீர்,காற்று, நெருப்பு,ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் சக்தியையும் உள்ளடக்கி உருவானவரு...
நாட்டுக்கு எத்தகைய சிக்கல் வந்தாலும் முறியடிப்பாரு...
ஏன்... நாம வாழுற இந்த பூமிக்கே ஆபத்துன்னா கூட வெளிகிரகவாசிகளோட ஃபைட் பண்ணி ஸேவ் பண்ணுவாரு...
அதைப் பாத்துப் பாத்து அந்த வயசுலயே நாமும் வளர்ந்து பெரியவங்க ஆனதும் சக்திமானா ஆகிடணும்ன்னு ஆசைப்பட்டேன்... அப்ப யாராவது என்கிட்ட பெரிய ஆளான பின்னாடி என்ன ஆக ஆசைன்னு பேட்டி கேட்டிருந்தா நான் சக்திமான் ஆகி இந்த ஒலகத்தையே காப்பாத்துவேன்னு சொல்லியிருப்பேன்...
(இந்த பன்னண்டாவதுல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கின புள்ளைங்க எல்லாம் இதய மருத்துவராகி ஏழைகளுக்கு இலவசமா சேவை செய்வேன்னு ஒரு டயலாக் விடுவாங்களே... அது மாதிரி...)
ஒருவாட்டி ஸ்டாஃப் ரூம்ல கணக்கு வாத்தியாரு கூப்பிட்டு கடைக்கு போய் வடை வாங்கிட்டு வரச்சொல்லி கையில நாலஞ்சு காசுங்க குடுத்தாரு...
நானும் உடனே பழக்கதோஷத்துல (இந்த தோஷத்துக்கு பரிகாரம் எங்கியும் இல்ல) சில்லற காசை உள்ளங்கையில மடக்கி வைச்சுக்கிட்டு அந்த ஒரு கையை நேரே மேலே தூக்கி நின்ன இடத்துலயே சுத்தினேனா... சக்திமான் மாதிரி அப்படியே பறந்து கடைக்கு போயிடலாம்ன்னு...
உள்ளங்கை விரிஞ்சிடுச்சு... குடுத்த காசெல்லாம் மூலைக்கொரு தெசையா சிதறிப் போச்சு...
"அறிவொளி! என்னடா பண்ண இப்ப"
"சார்! சக்திமான் மாதிரி பண்ணேன் சார்... இப்படி சுத்தினா பறந்து போலாம்ன்னு"
ரெண்டு பேரும் சில்லறைகள தேடினோம்... அங்கே இங்கே பொறுக்கி எடுத்தா அதுல ஒருரூபாயைக் காணோம்...
அன்னையோட சரி! அந்தக் கணக்கு வாத்தியார் அதுக்கப்புறம் என்னைக் கூப்பிட்டு எந்த வேலையும் வைக்காத மாதிரி சக்திமான் செஞ்சிட்டாரு...
நானாவது பரவால்ல... தரையில சுத்தனேன்... அப்பவே ஒரு சில தீவிர சக்திமான் வெறியர்ங்க அடுக்கு மாடி கட்டிடத்து மேல இருந்து சுத்தி கீழே விழுந்து செத்தே போனாங்க...
அப்புறம் காலம் போகப் போக புரிஞ்சிக்கிட்டேன்... சக்திமான் என்பது ஒரு கற்பனை கதாப்பாத்திரம்...
நாம கஷ்டத்துல இருக்கும் போதெல்லாம் கூப்பிட்டா அவர் வரமாட்டாரு... நமக்கு ஏதாவது துன்பம்ன்னா உடனே வந்து காப்பாத்த மாட்டாரு...
டிவியில ஒரு நாடகத்தைப் பார்க்கும் போது நல்லா ஆர்வமா பார்க்கணும்ன்னு சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை படமெடுத்திருக்காங்க... அதெல்லாம் வெறுமனே கற்பனைன்னு...
ஆனா இந்த புத்தியும் தெளிவும் எனக்கு வர்றதுக்கு முன்னாடி சின்னப் பையனா இருந்து டிவியில பார்த்தப்போ சக்திமானை உண்மைன்னே நம்பினேன்... அவருடைய சாகசங்கள் எல்லாம் உண்மையாவே நடந்ததுன்னு நம்பினேன்... உலகத்துல எங்கே எது நடந்தாலும் அவருக்கு தெரியும்ன்னே நம்பினேன்...
அப்படி எவ்வளவு பெரிய தீயஷக்தி வந்தாலும் அவரு வந்து காப்பாத்திடுவாருன்னு நம்பினேன்... ஒருவேளை அந்த நேரத்துல அவர் கொஞ்சம் டயர்டா இருந்தாலும் பார்லே ஜி ரெண்டு பாக்கெட் தின்னவுடனே புதிய சக்தி வருமுன்னு நம்பினேன்...
அந்த வயசுல... அந்த நேரத்துல யாராவது வந்து "தம்பி ! சக்திமான் என்பது எல்லாம் சும்மா... அது யாரோ ஒருத்தர் உட்கார்ந்து எழுதிய கற்பனை கதை... அதெல்லாம் நடிக்கிறவங்களை வைச்சு எடுத்த நாடகம்ன்னு" சொல்லியிருந்தா அவங்க மேல பயங்கரமா கோபம் வந்திருக்கும்... போகவிட்டு பின்னாடி மண்டை மேல கல்லெடுத்து அடிக்கணும்ன்னு தோணியிருக்கும்... ஆனால் சக்திமான் புண்ணியத்துல அப்படி ஏதும் நடக்கல...
அப்ப சின்ன வயசுல நான் சக்திமானே சகலமுன்னு நம்பியது தப்பா? குற்றமா? பாவமா?
இல்லை... இல்லை...
இல்லவே இல்லை...
அப்ப எது தான் தப்பு?
எது தப்புன்னா... இப்ப... இந்த வயசுல... ஒரு கையை மேல தூக்கிட்டு சுத்தினா சக்திமான் மாதிரி பறந்துடுவேன்னு நினைச்சனா அது தப்பு !
நம்பிக்கை வேற... உண்மைங்கிறது வேறன்னு இந்த வயசுலயும் புரிஞ்சிக்காம எவர்சில்வர் தட்டையோ, இரும்பு பலகையையோ கூட்டமா சேர்ந்து தட்டித் தட்டியே கொரோனாவை ஓட்டிடலாம்ன்னு நம்புனா அது தப்பு...!
மத்தபடி கடைக்கு போயிட்டு பார்லே ஜி பிஸ்கட்டை வாங்கிட்டு வந்து அதை அப்படியோ அல்லது டீயில தொட்டோ தின்னா தப்பேயில்லைங்க...!!!
நம்பிக்கை...
அது தானே எல்லாம்...
நம்புவோம்...
மாறும்ன்னு நம்புவோம்...
~ தகடூர் ப.அறிவொளி.
No comments:
Post a Comment