அதற்கென்ன சான்று என்று வினவியதும்
'புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு'
என்பதே அதற்கான சான்று என்றார்.
கம்பனைக் கற்காமல் எட்டி நின்று பார்த்து விட்டு எழுதுவோரின் கூற்றுகளை எவ்வாறு ஏற்க முடியும்?
கம்பவனத்தில் கால்பதித்து நடந்தால் தானே தெரியும்...
கம்பக்கடலில் கைவீசி திளைத்தால் தானே புரியும்...
பாரில் உள்ள மாபெரும் அதிசயம் என்னவென்று பாரதியைக் கேட்டபோது
"பாட்டு தான் பேரதிசயம்" என்றார்.
எழுத்தினைக் கொண்டு ஏற்படுத்தும் படைப்புகளில் கவிதையினும் விஞ்சுவது ககனத்தில் உள்ளதோ?
ஒரு நல்ல கவிதை என்னவெல்லாம் செய்யும்? என்ற கேள்விக்கு...
ஒரு நல்ல கவிதை என்னவெல்லாம் செய்யாது! என்பதே என் பதிலாகும்.
எழுதுவன எல்லாம் கவிதைகளா? எழுதுவோர் எல்லோரும் கவிஞர்களா?
தெரிந்தோ தெரியாமலோ என்னை எவரேனும் எங்கேனும் "அறிவொளி ஒரு கவிஞர்" என்று விளிக்கும் போது உண்மையில் பெரும்நாணமாக உள்ளது.
வேறெந்தப் புகழ்மொழியினை விடவும் கவிஞர் என்று கூறும் போது நான் மிகவும் நெளிகின்றேன் மனதிற்குள்ளேனும்.
கம்பன் மாநதி...
தானோ அதிலொரு கால்நதி என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
எழுத்துகளைச் சேர்த்து எழுதுவதாலோ,
வார்த்தைகளை உடைத்து எழுதுவதாலோ பிறந்து விடுமா கவிதை...
அதென்ன பொம்மையா? தொழிற்கூடத்தில் உருவாக்க...
அதென்ன விளைபொருளா?
ஆய்வகத்தில் உண்டாக்க...
சிறந்த கவிதை எவ்வாறு இருக்க வேண்டும்?
கம்பர் விடைதருகிறார்.
அவரன்றி இதற்கான விடையைத் தர வேறு எவர் தகுதியானவர்?
அகத்திய முனிவரின் அறிவுரையின்படி, இராமனும் சீதையும் இலக்குவனும் நடந்து செல்லும்போது வழியில் கோதாவரி நதியைக் காண்கின்றனர்.
அந்தக் கோதாவரி நதிக்கு கம்பர் கூறிய உவமை என்ன தெரியுமா?
பேரறிவும் நுண்மான் நுழைபுலமும் மிக்க சான்றோரின் கவிதை போல இருந்ததாம் கோதாவரி.
இரட்டுற மொழிதல் அடிப்படையில் ஆற்றுக்கும், கவிதைக்கும் ஏழுபண்புகளை வரிசைப்படுத்துகிறார்.
#புவியினுக்கு அணியாய்(01)
ஆறு தானே பூமிக்கு அணிகலன்.
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது ஔவை வாக்கன்றோ!
ஓராறு என்பது தொடர்ந்து நீரோடும் தன்மையுடன் விளங்கி, பூமிப்பெண்ணின் கழுத்தினில் தொங்குகின்ற நீண்ட ஆரத்தைப் போன்று அழகுடன் மிளிர வேண்டும்.
ஒரு கவிதை இந்த புவிக்கு அழகினைக் கூட்டுவதாக இருக்க வேண்டும்.
ஆறு பாய்வதால் கூடும் அழகினைப் போல கவிதை நெஞ்சில் தோய்வதால் உள்ளிருக்கும் உள்ளம் இன்னும் அழகு பெற வேண்டும்.
படிக்கத் தூண்டும் வகையில் ஒரு கவிதை பல்வேறு அலங்காரங்களை உடையதாக அமைந்திருக்க வேண்டும்.
#ஆன்றபொருள் தந்து(02)
ஆறானது மலையில் பிறப்பதால் அங்கிருந்தும், வரும் வழியிலும் எண்ணற்ற மலைபடுபொருள்களைக் கொண்டு வர வேண்டும்.
நதியில் மூழ்கினால் தீவினைப் பாவங்கள் தொலைந்து நல்வினைப் புண்ணியங்கள் என்னும் உயர்ந்த பொருளைத் தரவேண்டும்.
ஒரு கவிதை வெற்று அழகோடு மட்டும் இருக்காமல் உயிர் போன்று உயரிய பொருளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
தோண்டத் தோண்ட வளந்தரும் சுரங்கம் போல கற்கக் கற்க கருத்துகள் ஊறும் வண்ணம் செறிந்த பொருளை உள்ளடக்கி வைத்திருக்க வேண்டும்.
அக்கவிதையைப் படிப்போர்தம் உள்ளச்சிந்தனைகள் மேன்மேலும் உயர்வடைந்து அதன் வெளிப்பாடாக அவர்கள் வாழும் சமூகம் சிறப்புறச் செய்யும் வகையில் அமைதல் வேண்டும்.
#புலத்திற்றாகி(03)
ஆறானது பாய்கின்ற ஊர்களிலே கழனிகளைச் செழிப்பாக்கி நல்ல விளைபொருள்களை உண்டாக்கித் தரவேண்டும்.
வெள்ளமானது அதிக நிலப்பரப்புக்குப் பயன்தரும் வகையில் பரந்து பரவும் தன்மையுடன் விளங்க வேண்டும்.
நல்ல கவிதையானது தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவினை விளைவிக்க வேண்டும்.
அறிவினைக் கொண்டு ஆய்வு செய்ய ஆய்வு செய்ய ஆழ்ந்த பொருளைத் தரவேண்டும்.
#அவியகத்துறைகள் தாங்கி(04)
ஆறு தான் செல்லும் வழியில் பலரும் பயன்பெறும் வகையில் தம்முள் இறங்குவதற்கு வசதியாக இறங்குநீர்த்துறைகளை ஆங்காங்கே பெற்றிருக்க வேண்டும்.
கவிதையோ புறப்பொருளொடு அகப்பொருளையும் பேச வேண்டும்.
அன்பும், காதலும் கவிதையின் முக்கியமான பாடுபொருளாக இருத்தல் வேண்டும்.
அவித்தல் என்றால் மாற்றுதல் அல்லது பக்குவப்படுத்துதலாம்.
கவிதையும் கற்போரின் மனத்தினை நல்வழிக்கு மாற்றி அவர்களைப் பக்குவப்படுத்தி சிறப்படையச் செய்தல் வேண்டும்.
#ஐந்திணை நெறியளாவி(05)
ஆறானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களிலும் பாய்ந்து அனைத்து இடங்களிலும் வாழ்கின்ற மக்களுக்குப் பயன்பட வேண்டும்.
கவிதையோ புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஐந்து வகை ஒழுக்கங்களையும் அவற்றின் அங்கங்களையும் விளக்குவதாக அமைதல் வேண்டும்.
#சவியுறத் தெளிந்து(06)
நன்னீருக்கு அடிப்படைப் பண்பே அதனுடைய தெளிவாகும்.
நீரானது தூய்மையுடன் விளங்கினால் எவ்வளவு ஆழத்தில் உள்ள பொருட்களும் தெளிவாகப் புலப்படும்.
உள்ளே பொருள் இருப்பது வெளியே தெரிந்தால் தான் அதை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குதிப்பர்.
எனவே ஆறானது பார்ப்பவர்களைத் தன்னுள் இறங்க வைக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும்.
நல்ல கவிதையானது முதலில் எளிமையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.
குழப்பத்தையும், மயக்கத்தையும் தருகின்ற வகையில் இருக்கக் கூடாது.
எளிமையாக இருந்தாலோ, புரியும் தன்மையில் இருந்தாலோ அது கவிதையே அல்ல என்று சிலர் கூறுவர்.
புரியாத வகையில் கடினமான சிக்கலான பதங்களைப் பயன்படுத்தி எழுதுவதே கவிதைக்கலை என்பர்.
தோற்றத்தில் எளிமையாகவும், தோண்டத் தோண்ட ஆழமாகவும்...
பார்த்தவுடன் புரிவதாகவும், படிக்கப் படிக்க விரிவதாகவும் அமைகின்ற கவிதைகளே உயர்வான கவிதைகள்.
#தண்ணென்ற ஒழுக்கம் தழுவி(07)
ஆறானது தண்மையான குளிர்ந்த நீரினை உடையதாகவும், வற்றாத ஜீவநதியாகவும் விளங்குதல் வேண்டும்.
கவிதையும் தீயொழுக்கத்தைப் போதிக்காமல் நல்லொழுக்கத்தினை நவிலும் வகையில் அமைதல் வேண்டும்.
மெல்லென்ற ஓசைநயத்துடன் சொல்லுஞ் சிறந்த நடையுடன் திகழவேண்டும்.
மேற்கண்ட ஏழுபண்புகளுடன் இருப்பதே நன்னதியும், நற்கவியும்.
கற்பவர் இதயத்தில் ஓடுகின்ற ஆறே கவிதை.
நானிலத்தில் நடம்புரியும் கவிதையே ஆறு.
கண்டதெல்லாம் வந்து கலந்தமையால் இன்று இரண்டுமே மாசடைந்து போயின.
உள்ளிருக்கும் அழுக்குகளை அள்ளிக்கொட்டி நீக்கும் பணியும்,
நஞ்சேதும் கலந்திடாமல் கரையைக் கட்டி காக்கும் பணியும்,
பயன்தரும் நற்பொருளை மட்டும் அதற்குள்ளே தேக்கும் பணியும் நம்முடையதன்றோ?
-தகடூர் ப.அறிவொளி

No comments:
Post a Comment