Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 12 June 2020

தர்மபுரி - தருமபுரி இரண்டில் எது சரி?

கவிஞர் மகுடேசுவரன் ஐயாவின் பின்வரும் பதிவினைப் படித்துப் புரிந்து கொள்வோம்.

#கவிஞர் மகுடேசுவரன் ஐயாவின் பதிவு.

15. குறில் எழுத்தில் தொடங்கும் தமிழ்ச்சொல்லுக்கு  அடுத்து ர் என்ற மெய் தோன்றாது. 
*
‘வடசொல் அறிவோம்’ வரிசையில் மிக இன்றியமையாத குறிப்பு ஒன்றினைத் தந்து முடித்துக்கொள்கிறேன். எவ்வாறெல்லாம் அச்சொற்கள் தமிழல்லாத சொற்களாகின்றன என்பதனைக் கண்டுபிடிக்க இவ்வறிவு வலிமையான கருவியாக உதவும்.  

தமிழ்ச்சொற்களில் எழுத்துகள் எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதற்கு நம்மிடம் தெளிவான வரையறைகள் இருக்கின்றன. அந்தத் தன்மைகள்தாம் தமிழறிந்த ஒருவர் பிறமொழிச் சொற்களைக் கண்டறிவதற்கும் நற்பங்காற்றுகின்றன. 

தமிழ் மொழியில் குறில் எழுத்துகளை அடுத்து இரண்டாவதாய்த் தனித்து இடம்பெறாத இரண்டு மெய்யெழுத்துகள் இருக்கின்றன. 

ஒன்று ர். இன்னொன்று ழ். 

இவ்விரண்டு மெய்யெழுத்துகளைத் தவிர்த்த அனைத்து மெய்யெழுத்துகளும் ஒரு சொல்லுக்கு இரண்டாவது எழுத்தாக வரும். 

இன்னும் சொல்லப்போனால் அஃகான் என்னும் ஆய்த எழுத்தும் சொற்களின் இடையெழுத்தாகத்தான் வரும். முதலெழுத்தாகவோ கடைசி எழுத்தாகவோ தோன்றுவதில்லை. அஃது, எஃகு, பஃறொடை, அஃறிணை. 
  
மேற்சொன்ன இரண்டு மெய்களில் ழ் என்ற மெய்யெழுத்து தோன்றாதது தமிழியற்கை. ழகரம் தமிழின் பெருமை என்பதால் அது இடம்பெறுவதும் இடம்பெறாததும் தமிழுக்கே உரிய வழக்கு. அது குறித்து நமக்கு எந்தக் குழப்பமுமில்லை.
 
ர் என்ற இன்னொரு மெய்யெழுத்து இருக்கிறதே, அவ்வெழுத்து குறிலெழுத்தில் தொடங்கும் ஒரு சொல்லுக்கு இரண்டாவதாக வரக்கூடாது. 

அப்படி வந்தால் அச்சொல் வடசொல் என்று துணிந்து கூறலாம். இல்லையேல் தமிழில் தோன்றிய ஒரு சொல் வடமொழியிலும் அம்மொழி இயல்பின்படி வழங்குகிறது என்றே கொள்ள வேண்டும். 

குறில் எழுத்தினை அடுத்து ர் என்ற மெய்யெழுத்து வரும் சொற்களை நினைவிற்கொண்டு வாருங்கள். அவற்றுக்கான தமிழ்ச்சொல்லை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். 

அர்ச்சனை (பூவழிபாடு) 
அர்த்தம் (பொருள்)
அர்ப்பணம் (படையல்)
கர்ணம் (காது)
கர்ஜனை (முழக்கம்)
கர்வம் (செருக்கு)
கர்ப்பக்கிரகம் (கருவறை)
சர்க்கரை (வெல்லம்)
சர்ப்பம் (பாம்பு)
சர்வம் (எல்லாம்)
சொர்ணம் (பொன்)
தர்க்கம் (வழக்காற்றல்)
தர்ப்பணம் (ஈற்றுக்கடன்)
வர்க்கம் (வகுப்பு)

தமிழில் குறிலை அடுத்த எழுத்தாக ர் என்ற மெய் வராது என்பதால் அருத்தம், சருக்கரை, கருவம், தருக்கம் என்று தற்பவமாக வழங்குவார்கள். 

மொழியின் இத்தகு இயற்கையால்தான் அவ்வாறு ர் தவிர்த்து ரு போட்டு எழுதுகிறார்கள். ஏன் அவ்வாறு வழங்குகிறார்கள் என்பதற்கும் மொழியின் இவ்வியல்பே காரணம். 

அகராதியைப் புரட்டினால் அர், இர், உர், எர், ஒர் என்று தொடங்கும் தமிழ்ச்சொற்களில் ஒன்றைக்கூடக் காணமுடியாது. பிற உயிர்மெய்க் குறில்களுக்கும் இதுவே நிலை. வடசொற்களை அறிவதற்கு இம்முறையை நினைவிற்கொள்வது நன்கு பயன்படும். 
**
#வடசொல்_அறிவோம் 
பகுதி 15

எனவே தர்மபுரி என்பது பிழை; தருமபுரி என்பதே சரி.

No comments:

Post a Comment